முதல் காரணம் - எனக்கு வேணும் ஆனா வேணாம்!

நாம் இது நாள் வரையிலும் பணக்காரர்களாக மாறாததற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளதாக நான் கருதுகிறேன்.

அதில் முதல் காரணத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

நாம் அனைவருமே தெரிந்தோ, தெரியாமலோ பணத்தை வெறுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு ஆச்சரியமான செய்தி தெரியுமா? ஆம். நாம் உண்மையில் பணத்தை வெறுத்துக் கொண்டிருக்கிறோம்.

'பணம் வந்தா குணம் மாறிடும்'
'பணம் ஒரு பேய் (அ) சாத்தான்'
'பணம் வந்தா கை ஏறிடும்'
'பணம் வந்தா மதி கெட்டு போயிடும்'
'பணத்தை கொண்டு படுக்கையை வாங்கலாம், துாக்கத்தை வாங்க முடியாது'

போன்ற எத்தனையோ பழ (பாழ்) மொழிகள் நம் ஆழ்மனதிலே காலங்காலமாக பதியவைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நாம் தெரிந்தோ, தெரியாமலோ பணத்தை வெறுத்துக் கொண்டிருக்கிறோம்.

மேலும், நாம் ஒரு பணக்காரனை பார்த்தவுடன் சட்டென நம் மனதில் உதிக்கும் எண்ணம் 'அவன் எப்படியாவது குறுக்கு வழியில் தான் பணம் சம்பாதித்திருப்பான்' என்பதே. பணக்காரர்களை வெறுப்பது நம்மில் அனைவருக்குமே சகஜம்.

பணக்காரர்கள் ஈவு இரக்கமற்றவர்கள்,
பணக்காரர்கள் மதிக்கமாட்டார்கள்,
பணக்காரர்கள் சுயநலவாதிகள்,
பணக்காரர்கள் மற்றவர்கள் இரத்தத்தை உறிஞ்சபவர்கள்

என்று பல்வேறு விதமான எண்ணங்களோடும், அபிப்ராய்ஙகளோடும் நாம் வாழ்ந்து வருகிறோம். நாம் அனைவரும் தெரிந்தோ, தெரியாமலோ பணக்காரர்களை வெறுத்துக்கொண்டிருக்கிறோம். அப்போது தாங்கள் நாளைக்கு பணக்காரரானால், தங்களையும் இப்படித்தானே மற்றவர்கள் சாடுவார்கள் (அதுக்குத்தானே நாங்கெல்லாம் பணக்காரணாகல!).

பணக்காரர்களை வெறுப்பதும், பணத்தை வெறுப்பதும் ஒன்றுதான். கோயிலை வெறுத்தால் என்ன... சாமியை வெறுத்தால் என்ன... எல்லாம் ஒன்றுதான். ஆக, நாம் பணத்தையும், பணக்காரர்களையும் வெறுத்துக்கொண்டிருப்பது புரிகிறதா? நாம் விரும்பும் பொருட்களேயே அடைவது கடினமாக இருக்கும் போது, வெறுக்கும் பொருளை எப்படி அடைவது?

'அறிவே ஆயுதம்' என்பார்கள்... காந்தியின் அறிவு இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது. கோட்சேவின் அறிவு காந்தியையே கொன்றது. இங்கே அறிவு என்ற ஆயுதம் நல்லதா? கெட்டதா?

'கத்தியை கொண்டு காயும் வெட்டலாம். ஆளையும் வெட்டலாம்' இங்கே கத்தி நல்லதா? கெட்டதா?

இவையெல்லாம் ஆயுதங்களே, அதை பயன்படுத்துவோரை பொறுத்தே அதன் பயன் மாறுகிறதே தவிர அதனதன் தன்மை ஒன்றுதான்.

இங்கே பணமும் ஒரு ஆயுதமே, பணம் ஒரு கருவிதான். அதை வெறுப்பது என்பது முட்டாள் தனமே. காய் நறுக்கும் போது வெட்டி கொள்ளும் கத்தியை நாம் கோபித்து கொள்வதற்கு சமம், இன்று நாம் பணத்தை வெறுப்பது.

ஒரு இளைஞன், ஒரு இளைஞியை காதலிக்கிறான். உயிருக்குயிராக நேசிக்கிறான். பின்னொரு நாளில் ஏதோவொரு காரணத்திற்காக, யாரோ எதோ சொன்னார்கள் என்பதற்காக அந்த பெண்ணின் மீது வெறுப்பு வந்து விடுகிறது அவனுக்கு. பிறகு அந்த பெண்ணை வெறுக்கிறான். போன் செய்தாலும் எடுப்பதில்லை, நேரில் பார்த்தாலும் பேசுவதில்லை. ஆனால் அவள் சென்றவுடன் சதா சர்வகாலமும் அவள் நினைவாக அவன் இருக்கிறான். அவளில்லாமல் அவனால் உயிர் வாழ முடியாது. உண்மையாகவே அவன் அவளை நேசிக்கிறான். ஆனால் யாரோ, ஏதோ, எப்போதோ அவளை பற்றி சொன்னது, அவளை வெறுக்கும்படி செய்கிறது, வெறுக்கிறான். (இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதலல்ல) ஒரு பக்கம் விரும்புகிறான். ஒரு பக்கம் வெறுக்கிறான். இப்படி விரும்பிக்கொண்டே, வெறுத்துக்கொண்டே - வெறுத்துக்கொண்டே, விரும்பிக்கொண்டே இருந்தால் இந்த காதல் கல்யாணம் வரை போய் சேருமா? நிச்சயமாக சேராது.

அதே தவறைத்தான் நண்பர்களே, நாம் பணத்திலும் செய்து கொண்டிருக்கிறோம். (எனக்கு வேணும் ஆனா வேணாம்!) இன்றைய சூழ்நிலையில், நாம் அனைவரும் நலமாக, வளமாக வாழ்க்கை நடத்தவும், நம் தாய் தந்தையும், நம் குழந்தைகளும், அடுத்த சந்ததியரும், ஏன் இந்த ஊரும், நாடும் வளம் பெற பணம் இன்றியமையாத, அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதற்காக நாம் காலம் காலமாக போராடிக்கொண்டிருக்கிறோம். தினந்தோறும் அதன் பின்னால் ஓடுகிறோம். நேசிக்கிறோம். விரும்புகிறோம். ஆனால் மறு பக்கத்தில் யாரோ, ஏதோ, எப்போதோ சொன்னார்கள் என்பதர்க்காக பணத்தையும், பணக்காரர்களையும் வெறுத்துக் கொண்டிருக்கிறோம். வசை படிக்கொண்டிருகிறோம். இப்படி நாம் ஒரு பக்கம் பணத்தை வெறுத்துக்கொண்டே, விரும்பிக்கொண்டே - விரும்பிக்கொண்டே, வெறுத்துக்கொண்டே இருந்தால் ஆகபட்ட பணம் நம் கைகூடுமா என்றால், நிச்சயமாக கூடாது. சேராது.

எனவே நாம் பணக்காரர்களாக மாற வேண்டுமானால் பணத்தை பற்றியும், பணக்காரர்களை பற்றியும் கொண்டுள்ள எதிர்மறை எண்ணங்களை நம் ஆழ்மனதில் இருந்து துாக்கி எறிந்து விட வேண்டும. அப்போது தான் நாம் பணக்காரர்களாக ஆவதற்கான முதல் கதவு திறக்கும்.

பணத்தையும், பணக்காரர்களையும் நாம் நேசிக்கும் போது மட்டுமே நாம் பணத்தை நம் வாழ்வில் கொண்டு வரமுடியும்.

எனவே, நாம் இன்றிலிருந்து பணத்தை நேசிக்க கற்று கொள்ள வேண்டும். காதலிக்க வேண்டும். ஐ லவ் மணி, ஐ லவ் யூ மணி, ஐ லவ் யூ டா செல்லம்... என்றால் மட்டுமே நாம் பணக்காரர்களாக முடியும்.


மேலும் பணம் சம்மந்தமான பல செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். நன்றி!

No comments:

Post a Comment